தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர். முருகதாஸ். தீனா, ரமணா, ரஜினி, கத்தி, துப்பாக்கி ஆகிய வெற்றிப் படங்களை இயக்கி, ரசிகர்களின் மனதில் உறுதியான இடத்தைப் பெற்றவர். தற்போது அவர் பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சத்யராஜ் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் சிக்கந்தர் படம் வெளியிடப்பட உள்ளது.
இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானதும், இணையத்தில் பரவலாக வைரலானது. பான் இந்தியா என அழைக்கப்படும் தென்னிந்தியப் படங்கள் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற ஆரம்பித்துள்ளன. அவற்றில் சில படங்கள் பெரும் வசூலைப் பெற்றதில் இந்தித் திரையுலகமே மாற்றமடைந்துள்ளது. தென்னிந்தியப் படங்களின் தாக்கத்தால், இந்தி சினிமா ரசிகர்களும் வேறுபட்ட படங்களைக் காணும் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளனர். இதனால், இந்திப் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு குறைந்துள்ளது. அதே நேரத்தில், இந்தியில் உருவாகும் பான் இந்தியா படங்கள் தென்னிந்தியாவில் பெரிய வரவேற்பைப் பெற முடியாமல் இருக்கின்றன. இது முன்னணி இந்தி நடிகரான சல்மான் கானுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்துக்கான முன்பதிவுகள் தொடங்கிய நிலையில், ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.பாலிவுட் ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, நேற்று வரை குறைந்த அளவிலேயே டிக்கெட் முன்பதிவு நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், சல்மான் கான் சமீபத்திய பேட்டியில், “இங்கே நாம் எப்போதும் தென்னிந்தியப் படங்களை வரவேற்கிறோம். ஆனால் அங்கே அப்படி நடக்கவில்லை. நாங்கள் அவர்களது படங்களை சென்று பார்க்கிறோம். ஆனால் அவர்கள் எங்களது படங்களை பார்க்க வருவதில்லை. தென்னிந்தியாவில் கடை நிலைகளுக்கே சென்றாலும் ரசிகர்கள் எங்களை அடையாளம் கண்டு வாழ்த்துகிறார்கள். ஆனால் அவர்களை திரையரங்குகளுக்கு வரவழைப்பது சவாலாக இருக்கிறது.
ரஜினிகாந்த், ராம் சரண், சூர்யா போன்றவர்களின் படங்களை பாலிவுட் ரசிகர்கள் விரும்பிப் பார்ப்பார்கள். ஆனால் அந்த அளவிலான அன்பு தென்னிந்திய ரசிகர்கள் இந்தி படங்களுக்கு காட்டுவதில்லை. இதையெல்லாம் பொருட்படுத்தாமல், நான் தென்னிந்திய இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் தொடர்ந்து பணியாற்றுகிறேன். எனது படங்கள் தென்னிந்தியாவில் வெளியாகும் போது பெரிதாக வெற்றி பெறவில்லை. அதற்குக் காரணம், தென்னிந்திய நடிகர்களை மட்டும் தொடர்ந்து பெரும் ரசிகர்கள் வட்டம் ஆதரிக்கின்றது என நினைக்கிறேன்” என கூறியுள்ளார்.