இந்திய இசையமைப்பாளர்களில் மிக முக்கியமானவரும், பலரின் விருப்பமானவருமான இளையராஜா, 1500-க்கு மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவரது இசைக்கு இந்தியாவைத் தாண்டியும் பல வெளிநாடுகளில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த நடனக் கலைஞர்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அவர்கள் சென்னை நகரில் உள்ள இளையராஜாவின் ஸ்டுடியோவிற்கு நேரில் சென்று, அவரது புகழ்பெற்ற பாடல்களுக்கு நேரடியாக நடனம் ஆடி பார்வையாளர்களை மெய்மறக்க செய்தனர்.
அதில், “மீரா” படத்தில் இடம்பெற்ற “ஓ பட்டர்பிளை…” பாடலுக்கும், “சொல்ல துடிக்குது மனசு” படத்தில் இடம்பெற்ற “பூவே செம்பூவே…” பாடலுக்கும் அவர்களின் அழகிய நடனத்தால், இளையராஜாவையும், அங்கு இருந்த பார்வையாளர்களையும் கவர்ந்தனர்.இதுகுறித்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த இளையராஜா, “ரஷ்யாவில் இருந்து வந்து எனது ஸ்டுடியோவில் மிகத் திறமையான நடன நிகழ்ச்சியை காண்பித்த கலைஞர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். அவர்களின் நடனம் மிகவும் நளினமாகவும், உணர்ச்சிவசப்பட்டதையும், இதயத்தைக் கொள்ளை கொள்ளக்கூடியதாகவும் இருந்தது,” என தெரிவித்தார்.