ஆர்.ஜே. பாலாஜி நடித்து வெளியான ‘எல்கேஜி’, ‘வீட்ல விசேஷம்’, ‘ரன் பேபி ரன்’, ‘சொர்க்கவாசல்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதே நேரம், ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தை இயக்கி பெயர் மற்றும் புகழ் பெற்றார். தற்போது, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு தற்காலிகமாக ‘சூர்யா 45’ என்று பெயரிடப்பட்டுள்ளது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இதற்கு சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கிறார்.20 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சூர்யா-திரிஷா இணைந்து நடிக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி, நட்டி நட்ராஜ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. வேகமாக நடைபெற்று வரும் படப்பிடிப்பை முடித்து, இந்த ஆண்டு இறுதியில் ‘சூர்யா 45’ படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ‘ரெட்ரோ’ வெளியீட்டுக்குப் பிறகு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆர்.ஜே. பாலாஜி, ஐபிஎல் கிரிக்கெட் வர்ணனை செய்வது வழக்கம். கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆங்கிலத்தில் கேட்டு பழகிய வர்ணனைக்கு மாறாக, தமிழில் நகைச்சுவை கலந்து அவர் அளிக்கும் வர்ணனை ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. ஆனால், ஐபிஎல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த சீசனில் ஆர்.ஜே. பாலாஜி வர்ணனை செய்யவில்லை.
இது தொடர்பாக ஆர்.ஜே. பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “ஆண்டு முழுவதிலும் எனக்கு மிகவும் பிடித்தது மார்ச் மாத இறுதி, ஏப்ரல், மே மாதங்கள் தான். இந்த நேரத்தில் நான் எனக்குப் பிடித்த வேலையைச் செய்வேன். ஆனால், இந்த ஆண்டு ஐபிஎல் வர்ணனையில் பங்கேற்கவில்லை. எந்த விஷயத்தையும் முழுமையாகச் செய்ய வேண்டும் என நினைப்பவன் நான். தற்போது ஒரு படத்தை இயக்கி, அதில் முழு கவனம் செலுத்தி வருகிறேன். அதனால் இந்த ஆண்டு ஐபிஎலுக்கு இடைவெளி விட்டுவிட்டேன். அடுத்த சீசனில் நிச்சயம் வருவேன். என்னைப் பார்க்கும் ரசிகர்கள் ‘அண்ணா, நாளைக்கு வருவீங்களா? நேற்று ஏன் வரல, நாளைக்கு வருவீங்களா?’ எனக் கேட்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது,” என்று உணர்ச்சிபூர்வமாக பேசியுள்ளார்.