ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா’ திரைப்படம் 2022 செப்டம்பரில் வெளியானது. அதின் கதை, காட்சியமைப்பு, நடிப்பு, இசை, கரு ஆகிய அம்சங்களால் படம் மிகப்பெரிய ஹிட்டானது. சுமார் ₹14 கோடி செலவில் தயாரான இந்தப் படம், ரூ.400 கோடி வரை வசூல் செய்த வெற்றிப் படம் ஆக அமைந்தது. உலகம் முழுவதும் ‘காந்தாரா’க்கு ரசிகர்கள் உருவாகினர். 2 தேசிய விருதுகள் தொடங்கி பல பரிசுகளை வென்றது. இதன் தொடர்ச்சிப் பாகமாக ‘காந்தாரா 2’ உருவாகிவந்தது. ‘கேஜிஎப்’ படத்தை தயாரித்த ஹொம்பாலே நிறுவனம் இதையும் தயாரிக்கிறது.

‘காந்தாரா சேப்டர் 1’ என தலைப்பு வைக்கப்பட்ட இந்தப் படம், தொடர்ச்சியாக வந்தாலும் கதைப்போக்கில் முதல் பாகத்திற்கு முன்னாலான கால நிகழ்வுகளை எடுத்துரைக்கும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2 ஆண்டுகளாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவடைந்ததை ரிஷப் ஷெட்டி ஒரு மேக்கிங் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் அவர், “கனவுடன் இந்தப் படப்பிடிப்பைத் தொடங்கினோம். நம் ஊர், நம்ம மக்கள், நம்ம நம்பிக்கை இவை எல்லாம் எங்களோடு இருக்கின்றன. என் முதுகெலும்பாக தயாரிப்பாளர், என் குழு இருந்தார்கள். இது சாதாரண படம் அல்ல; 250 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. இது ஒரு சக்தி. தெய்வத்துக்கு நன்றி. ‘காந்தாரா’ உலகத்துக்கு உங்களை வரவேற்கிறேன்,” என்று கூறுகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.