கன்னட சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் தெலுங்கில் நடித்து வெற்றி பெற்ற ராஷ்மிகா மந்தனா, தற்போது ஹிந்தியில் முன்னேறி வருகின்றார். தமிழில் ‘சுல்தான்’ மற்றும் ‘வாரிசு’ படங்களில் நடித்த அவர், தற்போது தமிழ்-தெலுங்கில் தயாராகும் ‘குபேரா’ மற்றும் ஹிந்தியில் உருவாகும் ‘சிக்கந்தர்’ படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த வாரம் ராஷ்மிகா நடித்த ‘சாவா’ என்ற ஹிந்திப் படம் வெளியானது. இப்படம் முதல் மூன்று நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றிப் பாதையில் பயணிக்கிறது. இதன் மூலம், ராஷ்மிகா ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

2023ஆம் ஆண்டில் அவர் ஹிந்தியில் நடித்த ‘அனிமல்’ படம் 900 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அதன் பின்னர், 2024ல் வெளியான ‘புஷ்பா 2’ படம் 1800 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது, 2025ல் வெளியான முதல் படமான ‘சாவா’ 100 கோடியை கடந்து வெற்றியைக் கண்டுள்ளது. இந்த வருடத்தில் வெளியாகவுள்ள ‘குபேரா’ மற்றும் ‘சிக்கந்தர்’ ஆகிய படங்களும் 1000கோடிக்கும் அதிகமாக வசூலிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.