அறிமுக இயக்குநர் அன்பு எழுதி இயக்கியுள்ள ‘படைத்தலைவன்’ திரைப்படத்தில், மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில், கஸ்தூரி ராஜா, முனிஷ்காந்த், வெங்கடேஷ், யாமினி சந்தர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு இசையமைப்பாளராக இசைஞானி இளையராஜா பணியாற்றியுள்ளார். ‘படைத்தலைவன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர் அன்பு, நடிகர் சசிக்குமார், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், கஸ்தூரி ராஜா, பிரேமலாதா விஜயகாந்த், விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேசுகையில், “பல திரைப்படங்களில், கதாநாயகனை விட வில்லன் கதாபாத்திரங்கள் மிகவும் அழகாக அமைந்திருக்கும் என்ற ஒரு புதிய ட்ரெண்ட் செட் உருவாக்கியவர் விஜயகாந்த் தான். அவரைப் பற்றிப் பலர் பேசியிருக்கலாம். ஆனால் அவருடன் நேரடியாக பணியாற்றிய அனுபவம் எனக்கு உண்டு. ஒரு காலத்தில், விஜயகாந்த் அவருடன் பணியாற்றிய ஒரே நபர் நான்தான் என எண்ணியிருந்தேன். ஆனால் கஸ்தூரி ராஜா அவரும் அவருடன் பணியாற்றியதாக கூறியபோது சற்று பொறாமையாகவே உணர்ந்தேன்” என குறிப்பிட்டார்.
மேலும், தனது திருமணத்தின் போது விஜயகாந்த் வந்ததால் ஏற்பட்டிருந்த பெரும் போக்குவரத்து நெரிசலையும், அவரை பார்க்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டதைப் பற்றியும் நினைவுகூர்ந்தார்.“னவிஜயகாந்த் அவர்களின் விடாமுயற்சியும், கடுமையான உழைப்பும் சண்முக பாண்டியனுக்கும் இருந்தால், தமிழ்நாட்டு மக்கள் அவரை தவற விடமாட்டார்கள். அவர்களுக்குக் கிடைத்துள்ள இந்த அளவுக்கு கம்பீரமான நடிகரை அவர்கள் வாழ்த்தி வரவேற்பார்கள். மேலும் விஜயகாந்தின் இரண்டு கண்களும் அதேபோல் சண்முக பாண்டியனுக்கு இருப்பதைக் காண முடிகிறது. அவர் சினிமாவில் மேன்மேலும் வளரட்டும், நிச்சயமாக ‘ரமணா 2’ படத்தை உருவாக்கலாம் என கூறியுள்ளார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்.