தமிழில் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அதன் பின் அவர் இயக்கிய ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ போன்ற படங்களை மிகப்பெரிய பாராட்டையும் வெற்றியையும் பெற்றன. இப்போது தீபாவளி வெளியீடாக அக்டோபர் 17 அன்று வெளிவரவிருக்கும் அவரது புதிய படம் ‘பைசன்’ ஆகும். துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘கர்ணன்’, ‘வாழை’ படங்களைப் போலவே இதிலும் கிராமத்து வாழ்வியலை மையமாகக் கொண்டு மாரி செல்வராஜ் படத்தை உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில், ஒரு அண்மைய நேர்காணலில் ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்க விருப்பமா என்று நிருபர் ஒருவர் கேட்டபோது, மாரி செல்வராஜ் இதற்கு சுவாரஸ்யமான பதிலை அளித்துள்ளார். அவர் கூறியதாவது, ரஜினிகாந்த் சாருக்கு என்மீது மிகுந்த பாசம். என் ஒவ்வொரு படம் வெளியானாலும் என்னை நேரடியாக அழைத்து பாராட்டுவார். ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்கள் வெளிவந்தபோது அவர் தனியாக அழைத்து பாராட்டினார். ‘வாழை’ படம் வெளியானபோது, அவர் எனக்கு தனியாக ஒரு பெரிய கடிதம் எழுதியும் அனுப்பினார்.
நாங்கள் பலமுறை கதைகள் குறித்து பேசியுள்ளோம். என்னிடம் சில கதைகள் தயார் நிலையில் உள்ளன, அவற்றை ரஜினி சாரிடம் பகிர்ந்துள்ளேன். அவர் என்னை நம்பி, ஒரு நாள் சேர்ந்து பணியாற்ற விரும்பினால், அதற்குத் தயாராக இருக்கிறேன். என் கதை என்பது ஹீரோவுக்காக எழுதப்படுவது அல்ல, அந்தக் கதைக்கு ஏற்ற நடிகர் யாராக இருந்தாலும் அவர் நடிக்கலாம். ரஜினி சாரும் நடிக்கலாம், துருவ் விக்ரமும் நடிக்கலாம். ரஜினி சாரை கொண்டு படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தால், அவருக்கேற்றவாறு கதையை மெருகேற்றி படமாக்குவேன் என மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.