சினிமா உலகில் மிக உயர்ந்த பெருமை வாய்ந்த விருதாகக் கருதப்படும் விருது ஆஸ்கர் விருதாகும். இவ்விருதினை பெறுவது ஒவ்வொரு திரைப்படக் கலைஞரின் மிகப்பெரிய கனவாகவும் குறிக்கோளாகவும் உள்ளது. ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் போன்ற பல்வேறு பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆஸ்கர் விழா ஆண்டுதோறும் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறுகிறது. அதன்படி, 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் மார்ச் மாதம் 2-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டின் ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலில், சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் என்ற பிரிவில், இந்தியாவைச் சேர்ந்த “அனுஜா” என்ற குறும்படம் தேர்வாகியுள்ளது. இந்த படத்தை நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோரும் இணைந்து தயாரித்துள்ளனர். ஆஸ்கார் ரேஸில் இருந்த அனைத்து திரைப்படங்களும் வெளியேறிய நிலையில் இந்த ஒரு குறும்படம் மட்டுமே இந்தியாவின் நம்பிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.