பிரபுதேவா நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜாலியோ ஜிம்கானா’. இப்படத்தை இயக்கியுள்ளவர் சக்தி சிதம்பரம். ராஜன் மற்றும் நீலா இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் மடோனா, அபிராமி, யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்று வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தில் பிரபுதேவா பிணமாக நடித்துள்ளார்.
படத்தின் அறிமுக விழாவில் இயக்குநர் சக்தி சிதம்பரம் பேசுகையில், “கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பெரும்பாலும் வன்முறை மற்றும் சாதி சார்ந்த கதைகளே உருவாகி வருகின்றன. ஆனால் இந்தப் படம் டெட்பாடி மற்றும் அதனை தூக்கிச் செல்லும் ஹீரோவை மையமாகக் கொண்டது. கதையை கேட்டவுடன், ‘டெட்பாடியாக நடிக்கிறேன்’ என்று பிரபுதேவா உடனே ஒப்புக்கொண்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதைத் தொடர்ந்து, அவரை மையமாக வைத்து நான்கு ஹீரோயின்களை அறிமுகப்படுத்தினோம்.
இது ஒன்றரை நாளில் நடக்கும் கதை. டெட்பாடியாக பிரபுதேவா நடித்துக்கொண்டிருக்கும்போது, அவரை சுற்றி பலர் நகைச்சுவை நிகழ்த்திக் கொண்டிருப்பார்கள். அந்த சூழலிலும் அவரால் தன்னைக் கட்டுப்படுத்தி சிறப்பாக நடித்திருக்கிறார். ஒன்றரை நாளில் நடக்கும் கதையின் முழு நேரத்திலும் பிரபுதேவா 110 நிமிடங்கள் பிணமாக நடித்துள்ளார். இது ஒரு முக்கிய சாதனையாகும். இதற்கு முன்னர் ‘மகளிர் மட்டும்’ படத்தில் நாகேஷ் சார் சில காட்சிகளில் மட்டுமே பிணமாக நடித்திருந்தார். ஆனால் பிரபுதேவா இந்தப் படத்தில் முழுக்க முழுக்க அப்படியே நடித்திருக்கிறார் என்றார்.இந்த திரைப்படம் இன்று (நவம்பர் 22) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.