2023 பிப்ரவரியில் காதல் திருமணம் செய்து கொண்ட மலையாள நடிகை அபர்ணா வினோத், இரண்டு வருடங்கள் முடிவதற்குள் தனது விவாகரத்தை அறிவித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மலையாளத்தில் நிவின்பாலி நடித்த நண்டுகளுடே நட்டில் ஒரிடவேள என்கிற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான அவர், கோகினூர் படத்தின் மூலம் பிரபலமானார். தமிழில் விஜய் நடித்த பைரவா திரைப்படத்தில், நாயகி கீர்த்தி சுரேஷின் தோழியாகவும், திருப்புமுனை ஏற்படுத்தும் கதாபாத்திரமாகவும் நடித்திருந்தார். இதை தொடர்ந்து, நடுவன் என்கிற தமிழ்ப் படத்தில் கதாநாயகியாகவும் நடித்தார்.
2022-ல் ரினில் ராஜ் என்பவரை காதலிப்பதாக அறிவித்த அபர்ணா, அப்போது “உன்னை முதன்முதலாக சந்தித்த நாளிலிருந்து என் வாழ்க்கை முழுவதும் மாறத் துவங்கியது” என்று உருக்கமாக கூறியிருந்தார். ஆனால், இரண்டு வருடங்களுக்குள் அந்தக் காதல் திருமணம் முடிவுக்கு வந்துவிட்டது. இது ரசிகர்களுக்கு உண்மையாகவே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அபர்ணா வினோத் கூறுகையில், “தீவிரமான யோசனைகளுக்குப் பிறகே என் திருமணத்தை முடிக்க முடிவெடுத்தேன். இது அவ்வளவு எளிதான முடிவு அல்ல, ஆனால் சரியான நேரத்தில் எடுத்த சரியான முடிவாக நம்புகிறேன். எனது திருமணம் பல உணர்ச்சிகரமான சந்தர்ப்பங்களையும் கடினமான சோதனைகளையும் சந்தித்தது. எனது முன்னேற்றத்திற்காக இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று தெரிவித்தார்.