96 மற்றும் மெய்யழகன் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பிரேம் குமார் சமீபத்தில் அளித்த நேர்காணலில், தமிழ் திரைப்படத் துறையில் எதிர்மறையான விமர்சனங்கள் தற்போது பெரும் பிரச்சனையாக உள்ளதாக கூறினார். இது நாளுக்கு நாள் மோசமாகவே வளர்ந்து வருகிறது எனவும் அவர் கூறினார். இன்று திரையுலகத்தில் பல விமர்சகர்கள் இருந்தாலும், அவர்களில் சிலர் பயன்படுத்தும் வார்த்தைகள் மற்றும் அவர்கள் பேசும் நடைமுறை முற்றிலும் எதிர்மறையானவை என கூறியுள்ளார். குறிப்பாக, ஒரு படம் வெளியான பிறகு அதன் முதல் வாரத்தையே குறிவைத்து விமர்சனம் செய்வது அதிகமாகிவிட்டது என தெரிவித்தார்.

இவர்கள் ஒரு திட்டமிடலுடன் செயல்படுகிறார்கள். எந்தவொரு படமும் முதல் வாரத்தில் வசூலில் வெற்றிபெற்றால், தயாரிப்பாளர்கள் தானாகவே அடுத்த பட வாய்ப்பை அந்த விமர்சகர்களிடம் தரக்கூடிய நிலை உருவாகிறது. இப்போது, பணம் வாங்கி விமர்சனம் செய்யும் கலாசாரம் 90 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். நேர்மையான விமர்சகர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர் என்றும், இருப்பவர்களும் ஒரு படத்தை மதிப்பீடு செய்ய தேவையான திறமைகளைப் பெரும்பாலும் பெறவில்லை என்றும் விமர்சனம் செய்தார்.
மிகக்குறைவான சில நபர்களே உண்மையான, தரமான விமர்சனங்களை வழங்கும் நிலைமை உள்ளது. ஆனால் அவர்களையும் சிலரே வாசிக்கிறார்கள். பெரும்பாலான பார்வையாளர்கள் எதிர்மறை விமர்சனங்களையே எதிர்பார்த்து பார்க்கின்றனர். இதனால், மக்கள் திரையரங்கிற்கு சென்று படம் பார்ப்பதற்கும் தயக்கம் கொள்கின்றனர்.இது போன்ற விமர்சனங்கள் ஒரு திரைப்படத்தின் ஓட்டத்தையும், அதன் வாழ்நாளையும் பாதிக்கக்கூடியவை என்பதைக் கருத்தில் கொண்டு, தயாரிப்பாளர்கள் ஒன்று கூடி சில கட்டுப்பாட்டு விதிமுறைகளை உருவாக்க வேண்டிய தேவை மிக அதிகமாக இருக்கிறது என்று அவர் தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.