பவர் ஸ்டார் பவன் கல்யாண், தெலுங்கு திரைப்படத் துறையின் முன்னணி நடிகராவதோடு அரசியல்வாதியாகவும் உள்ளார். ‘அக்கட அம்மாயி இக்கட அப்பா’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு அவர் நடித்த படங்கள் தொடர்ந்து பிளாக்பஸ்டர் வெற்றிகளை பெற்றன. இவர் தற்போது ‘ஹரி ஹர வீரமல்லு’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கிரிஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார் எம்.எம். கீரவாணி. இதில் நாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஒரு பான் இந்தியா படமாக வெளியிடப்படுகிறது.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘கேட்கணும் குருவே’ என்ற பாடலை நடிகர் பவன் கல்யாணே பாடியிருந்தார். அந்த பாடலின் படப்பிடிப்பு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் கடந்த மாதம் 28-ம் தேதி வெளியாவது என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்போது படம் வெளியாகவில்லை. அதன் பிறகு, இந்த திரைப்படம் மே மாதம் 9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நேரத்திலும் படம் வெளியாகவில்லை.
இந்நிலையில், ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படம் ஜூன் 12-ம் தேதி வெளியாகும் என தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பவன் கல்யாண் துணை முதல்வராக பதவியேற்ற பின்னர் வெளியாகும் முதல் திரைப்படமாக இருப்பதால், இந்த படத்தின் மீது ரசிகர்களிடையே அதிகமான எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.