பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஒரு பிரபல அரசியல்வாதியாகவும், தெலுங்கு திரைப்படத் துறையில் முன்னணி நடிகராகவும் இருக்கிறார். ‘அக்கட அம்மாயி இக்கட அப்பா’ என்ற திரைப்படம் மூலம் இவர் திரையுலகில் நடிகராக தனது பயணத்தைத் தொடங்கினார். அதன்பிறகு அவர் நடித்த பல படங்களும் தொடர்ந்து பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களாக மாறின. தற்போது அவர், இயக்குநர் சுஜீத் இயக்கும் ‘ஓஜி’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இதேபோல் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, பிரகாஷ் ராஜ், ஸ்ரீயா ரெட்டி, அர்ஜுன் தாஸ், ஷாம் மற்றும் ஹரிஷ் உத்தமன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை டி.வி.வி. என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் டி.வி.வி. தனய்யா தயாரித்து வருகிறார்.
ஆரம்பத்தில் இந்தப் படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியாவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிவடைவதற்குள் சில காலதாமதம் ஏற்பட்டதனால் வெளியீடு தள்ளிப் போனது. தற்போது, படப்பிடிப்பு வேலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நடிகர் பவன் கல்யாண் மீண்டும் ‘ஓஜி’ படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.