ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பாண்டுரங்கன் தயாரித்தும், கஜேந்திரா இயக்கியுள்ள திரைப்படம் ‘குற்றம் தவிர’. இதில் ரிஷி ரித்விக் கதாநாயகனாகவும், ஆராதியா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் சரவணன், வினோதினி, ஆனந்த் பாபு, செண்ட்ராயன், ஜார்ஜ் விஜய், சாய்தீனா, மீசை ராஜேந்திரன், ராணுவ வீரர் காமராஜ், குழந்தை சாய் சைந்தவி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ரோவின் பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பை ஸ்ரீகாந்த் தேவா மேற்கொண்டுள்ளார்.

படத்தின் முன்னோட்டமும், பாடல்கள் வெளியீட்டு விழாவும் நடந்தது. விழாவில் நாயகி ஆராதியா பேசுகையில் கூறியதாவது: ‘மதிமாறன்’ படத்தின் மூலம் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. எனக்கு அந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் மந்த்ராவிற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். இதுவரை நான் 12 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், அவற்றில் ஒன்றே வெளிவந்துள்ளது. இதனால் எனக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது.
எனினும், அந்த படங்கள் விரைவில் வெளியாவது என்ற நம்பிக்கையும் இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தயாரிப்பாளர் மற்றும் அவரது குழுவினர் எங்களை மிகவும் நன்றாக பார்த்துக் கொண்டார்கள். இதில் முதல் முறையாக நான் நடனமாடி நடித்துள்ளேன். அந்த காட்சியை பார்த்தபோது மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது என்று கூறினார்.