விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கிய ‘மத கஜ ராஜா’ படம் 12 ஆண்டுகள் கிடப்பில் இருந்த நிலையில், அனைத்து பிரச்னைகளும் முடிந்து நேற்று (ஜன., 12) வெளியானது. படத்திற்கு ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக பல படங்கள் வெளியீடாகமல் கிடப்பில் உள்ளன.
இந்த பட்டியலில், நடிகர் விக்ரம் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2016 ஆம் ஆண்டில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, நிதி பிரச்னைகள் உள்ளிட்ட பல காரணங்களால் மீண்டும் மீண்டும் தடைபட்டது. இருந்தாலும், அந்த சவால்களை கடந்த கவுதம் வாசுதேவ் மேனன், படப்பிடிப்பை முடித்து விட்டார். படத்தின் ரிலீஸ் தேதிகள் பலமுறை அறிவிக்கப்பட்டும் பின்னர் வெளியிட முடியாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால், ரசிகர்கள் பலமுறை ஏமாற்றமடைந்தனர்.
இதற்கிடையில், மலையாளத்தில் மம்முட்டி தயாரித்து நடித்துள்ள ‘டொமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ்’ என்ற படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில், ‘துருவ நட்சத்திரம்’ பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கவுதம் வாசுதேவ் மேனன், “துருவ நட்சத்திரம் வெளியாகும் சூழலில் யாரும் எனக்கு உதவவில்லை. அந்தப் படம் பற்றிய உழைப்பையும் பிரச்சனைகளையும் யாரும் கவனிக்கவில்லை. ஒருவேளை படம் வெற்றி பெற்றால், ஓ அப்படியா என்று கேட்பார்கள். அதற்கு யாரும் உண்மையாக சந்தோஷம் அடைய மாட்டார்கள். எனக்கு தாணு மற்றும் லிங்குசாமி இருவரே மட்டும் கால் செய்து பேசினர். இப்படத்திற்கு ரசிகர்களிடையே இருக்கும் எதிர்பார்ப்பு மற்றும் அவர்கள் காட்டும் அன்பே என்னை இன்றும் தொடர்ந்து செயல்பட வைக்கிறது,” என்று கூறினார்.