தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து, திரை ரசிகர்களிடையே தனக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை தமன்னா. சமீபத்தில் அவர் நடித்த ‘பப்ளி பவுன்சர்’ மற்றும் ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.
தற்போது அவர் ‘சிக்கந்தர் கா முக்தார்’ என்ற படத்தில் நடித்துவிட்டார். இதில் தமன்னாவுடன், அவினாஷ் திவாரி, ஜிம்மி ஷெர்கில், திவ்யா தத்தா, சோயா அப்ரோஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை நீரஜ் பாண்டே இயக்கியுள்ளார். படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், வட மற்றும் தென்னிந்திய சினிமாவின் வேறுபாடுகள் குறித்து தமன்னா தனது கருத்தை வெளிப்படுத்தினார். அவர் கூறியதாவது, சினிமாவில் இருக்கும் பிரிவினைகளை நிறுத்த வேண்டிய நேரம் இது. இதுபோன்ற வேறுபாடுகள் திரைத்துறையை மேலும் தகர்க்க மட்டுமே உதவுகின்றன. இதற்கான பழி பெரும்பாலும் நடிகர் அல்லது நடிகைகளின் மேல் விழுகிறது. வட இந்தியா மற்றும் தென்னிந்திய திரைத்துறைகள் ஒன்றிணைந்து உண்மையான பான்-இந்திய திரைப்படங்களை உருவாக்க வேண்டும்,” என்றார்.