கமல்ஹாசன் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் தான் ‘தக் லைப்’. இந்த படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகரான அலி பசல் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக, நடிகர் அலி பசல் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படமாக இது அமைந்துள்ளது.

இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளன. இப்படம் வரும் ஆண்டின் ஜூன் 5-ஆம் தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.கடந்த செப்டம்பர் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. தற்போது வெளியாகியுள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு டீசர், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
மேலும், ‘தக் லைப்’ திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என அறிவித்து படக்குழு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். “பந்தலுக்கு ஈசான மூலை” எனும் வரிகளைப் பற்றி கமல்ஹாசன் கேட்பது காணப்படுகிறது. இந்த பாடல் கமல்ஹாசன் குரலில் இருக்கக்கூடும் என அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், ‘தக் லைப்’ திரைப்படத்தின் முதல் பாடல் மிக விரைவில் வெளியாகவுள்ளதாக ஒரு புதிய போஸ்டரையும் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.