கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. தற்போது, சினிமாவை மட்டுமின்றி, பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள் உள்ளிட்ட பல தொழில்களை தொடங்கி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். அதோடு, ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் சில படங்களை தயாரிக்கவும் செய்கிறார். இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள தனது பங்களாவை, விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து, ஹோம் ஸ்டுடியோவாக மாற்றியிருக்கிறார்.

7000 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த ஸ்டுடியோவை, நிகிதா ரெட்டி என்பவர் நேர்த்தியான உள் வடிவமைப்புடன், கைவினைப் பொருட்களை இணைத்து பிரமாண்டமாக வடிவமைத்திருக்கிறார்.
இந்த ஹோம் ஸ்டுடியோவை, தாங்கள் நடத்தி வரும் தொழில்கள் தொடர்பான முக்கியமான கூட்டங்கள் நடத்துவதற்கும், நண்பர்களுடன் சந்திப்பு ஏற்பாடு செய்வதற்கும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். இந்த ஸ்டுடியோவின் பணிகள் முடிந்த நிலையில், அதன் புகைப்படங்களும் வீடியோக்களும் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.