நடிகர் அல்லு அர்ஜுனின் அப்பா அல்லு அரவிந்தின் தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில், சந்து மொன்டேட்டி இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘தண்டேல்’.
ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகாகுளம் பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்கள் 2018ஆம் ஆண்டு குஜராத்தில் மீன்பிடி தொழில் செய்து கொண்டிருந்தபோது, தவறுதலாக பாகிஸ்தான் கடல் பகுதியில் சென்றுவிட்டனர். இதனால் அவர்கள் சிறைபிடிக்கபட்டு, கராச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த சுஷ்மா சுவராஜ், கடுமையான முயற்சிகளின் பிறகு அவர்களை மீட்டுவந்தார். இந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு தான் ‘தண்டேல்’ படம் உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த மீனவர்களில் 20 பேரிடமிருந்து உரிமை பெற்ற பிறகே ‘தண்டேல்’ படம் எடுக்கப்பட்டது என்று தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார். 20 பக்க அளவிலான கதையை இயக்குனர் சந்து, இரண்டரை மணி நேர உணர்வுபூர்வமான படமாக மாற்றியுள்ளார் என படத்தின் நாயகி சாய் பல்லவியும் இயக்குனரை பாராட்டியுள்ளார். காதலும் தேசப்பற்றும் கலந்த படமாக உருவாகியுள்ள ‘தண்டேல்’, தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் பிப்ரவரி 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.