‘சித்தா’ படத்தை இயக்கிய அருண் குமார் இயக்கத்தில், விக்ரம் தனது 62-வது திரைப்படமாக நடித்துள்ள படம் ‘வீர தீர சூரன்’. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ரியா ஷிபு தயாரித்துள்ளார், மேலும் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் மதுரை மையமாக கொண்ட கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. ‘வீர தீர சூரன்’ பல தடைகளை கடந்து வெளியானது. இதன் கதையமைப்பு வேகமானதும், விறுவிறுப்பானதுமானது. இது விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான ட்ரீட்டாக அமைந்துள்ளது. திரைப்படம் வெளியான ஒரு வாரத்துக்குள் உலகளவில் ₹52 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த வார இறுதியில் படம் மேலும் அதிக வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தை வெற்றிப் படமாக மாற்றிய ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், விக்ரம் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும் போது,”இப்படம் வெளியாகும் முன் பல சிக்கல்கள் இருந்தன என்பதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள். என் ரசிகர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதுதான் என் நோக்கம். இந்த படம் அதன் விளைவாக உருவானது. படத்தை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!” என தெரிவித்துள்ளார்.