இயக்குனர் லிங்குசாமியின் புதிய ஹைக்கூ கவிதைத் தொகுப்பு பெயரிடப்படாத ஆறுகள் இன்று வெளியிடப்பட்டது. முனைவர் கு. ஞானசம்பந்தன் தலைமையில், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நூலை வெளியிட்டார். வெளியிடப்பட்ட நூலை நடிகை அபிராமி பெற்றுக்கொண்டார். என்னை சிரிக்க வைக்கும் ஒருவர் லிங்குசாமி என்று மேடையில் உரையாற்றிய கௌதம் வாசுதேவ் மேனன், “லிங்குசாமி எனக்குப் மிகவும் நெருங்கிய நண்பர். அவரின் எல்லா விஷயங்களையும் நான் ரசிப்பேன் என்பது அவருக்குத் தெரியும். அதனால்தான் இந்த புத்தகத்தை வெளியிடச் சொன்னார். நாங்கள் இருவரும் பல விஷயங்களைப் பற்றி பேசுவோம். என்னை சிரிக்க வைக்கும் ஒருவர் லிங்குசாமி.

என்னுடைய வெளிவராத ஒரு படத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்து, அதற்காக பல உதவிகளையும் செய்தவர். புத்தகத்தில் எனக்கு பிடித்த ஒரு வரியைப் பகிர விரும்புகிறேன்: ‘தீக்குச்சியை உரசிய அதே கணத்தில் வானில் மின்னல்’. இந்த வரி எனக்கு ரன் திரைப்படம் பார்த்த அனுபவத்தை அளித்தது. இந்தக் கவிதையை ஒரு காட்சியாக என் அடுத்த படத்தில் சேர்க்க வேண்டும் என ஆசை.
எதற்காக என்னைக் கூப்பிட்டு நூலை வெளியிடச் சொன்னார் என யாரும் கேட்க வேண்டாம். அவர் என் நண்பர், அதனால் நான்தான் இதை வெளியிட வேண்டும். நான் சிரித்துப் பழகி கருத்தை கவரும் ரசிகன் என்பதை என் நண்பர் அறிவார். அவரும், கவலை மறக்க கவிதை பாடுபவர் என்பதை நானும் அறிவேன்.லிங்குசாமியின் பேச்சு எப்போதும் சுவாரஸ்யமாக இருக்கும். பஞ்ச் லைன் மூலம் என்னை சிரிக்க வைப்பார். என் நலனில் அக்கறை காட்டும் ஒருவர். இந்தக் கவிதைத் தொகுப்பில் என் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வரிகள் உள்ளன. உதாரணத்திற்கு, ‘சிறிய வட்டம் நிலா, பெரிய வட்டம் வானம், கிணற்றுத் தவளைக்கு…’ என்ற வரி. இதில் கிணற்றுத் தவளை நான்தான் என்று உணர்கிறேன்” என்று தெரிவித்தார்.