2002ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறையில் இசையமைப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கியவர் டி.இமான். அதற்குப் பிறகு, ரஜினிகாந்த், அஜித், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் பல படங்களில் இசையமைத்து, திரையுலகில் தனக்கென ஒரு உறுதியான இடத்தைப் பெற்றார். அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படத்திற்கு இசையமைத்து தேசிய விருதைப் பெற்றார். கிரி, மைனா, கும்கி, கயல், பாண்டியநாடு, ஜீவா, ஜில்லா, மனம்கொத்திப் பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டுப் பிள்ளை, மருது, வெள்ளக்கார துரை, அண்ணாத்த உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து, பல ஹிட் பாடல்களைத் தந்தவர் இமான்.

தற்போது இசையமைப்பாளர் இமான், சமூக சேவைகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தனது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை அரசு மருத்துவமனையில் தனது உடலை தானமாக வழங்கியுள்ளார். இந்த தகவலை அவர் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
இமான் தனது 23 ஆண்டுகளுக்கான இசைப் பயணத்தை பற்றி இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்துள்ளார். அதில், “23 வருடங்களுக்கு முன்னர் விஜய் மற்றும் பிரியங்கா சோப்ரா நடித்த ‘தமிழன்’ படத்தின் மூலம் இசை உலகில் காலடி வைத்தேன். அதுவே என் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் என்பதை அப்போது தெரியவில்லை. இன்று நன்றியுடன் அந்த நினைவுகளைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. என் ரசிகர்கள், வழிகாட்டிகள் மற்றும் நலம் விரும்பிகள் – உங்கள் அன்பே எனது மிகப்பெரிய சக்தி. இந்தப் பயணத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றியமைத்ததற்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.