இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். நீண்ட காலமாக அவருக்கு ஒரு சிம்பொனி இசை உருவாக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. அந்தக் கனவை சமீபத்தில் நிஜமாக்கியுள்ளார். ‘வேலியன்ட்’ என்ற தலைப்பில் ஒரு பிரம்மாண்டமான சிம்பொனி இசையை அவர் வெறும் 35 நாட்களில் உருவாக்கி முடித்ததாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.

இந்த சிம்பொனி இசை கடந்த மார்ச் 8ஆம் தேதி லண்டனில் முதல் முறையாக இசைக்கூடத்தில் வாசிக்கப்பட்டு ஒரு முக்கியமான சாதனை படைத்தது. இதனால் உலகம் முழுவதும் பலரும் இளையராஜாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்தியாவின் பெருமையை உயர்த்திய இளையராஜாவுக்கு அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று (மார்ச் 18) இளையராஜா டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து அவரது வாழ்த்துகளை பெற்றுள்ளார். இந்த சந்திப்பின் புகைப்படத்தை பகிர்ந்த இளையராஜா, “பிரதமர் மோடி அவர்களுடன் சந்தித்தது எனக்கு மறக்க முடியாத ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது. என் சிம்பொனி ‘வேலியன்ட்’ உட்பட பல விஷயங்களை நாங்கள் பேசினோம். அவருடைய பாராட்டு மற்றும் ஆதரவிற்கு நான் பணிவுடன் நன்றி தெரிவிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.