2015 ஆம் ஆண்டு மோகன்ராஜா இயக்கத்தில், ரவி மோகன் கதாநாயகனாக நடித்த தனி ஒருவன் திரைப்படம் வெளியாகியது. இதில் அரவிந்த் சாமி, நயன்தாரா, ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இசையமைப்பாளரான ஹிப் ஹாப் ஆதி, மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தும், நல்ல வரவேற்பைப் பெற்றார். தமிழ் இசைத்துறையில் ஹிப் ஹாப் இசையை முன்னெடுத்துச் சென்ற முக்கியமான இசைக் கலைஞர்களில் ஆதி மற்றும் ஜீவா இடம்பிடித்தவர்கள். 2005-ல் ஆர்குட் சமூக வலைதளம் வாயிலாக சந்தித்த இருவரும், இசையின் மீது கொண்டிருந்த ஆர்வத்தினால் 2010-ல் ஹிப் ஹாப் தமிழா எனும் இசைக்குழுவை தொடங்கினர். 2015-ம் ஆண்டு ஆம்பள, இன்று நேற்று நாளை, தனி ஒருவன் படங்களுக்கு இசையமைத்து தங்கள் பயணத்தை மேலும் வலுப்படுத்தினர்.
இப்படங்களின் இசை ரசிகர்களால் விரும்பப்பட்டாலும், தனி ஒருவன் படத்தின் இசை மிகுந்த வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில், 2015-ல் தனி ஒருவன் இயக்குனர் ராஜாவுடன் எடுத்த புகைப்படத்தை, இசையமைப்பாளர் ஆதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர்.“இன்று முதல் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அதிகாலை நேரத்தில் எடுக்கப்பட்ட படம் இது. ராஜா அண்ணா, ஆதி, ஜீவா – ‘நாமெல்லாம் ஒரே காரில் போகலாமா?’ என்று கேட்டது இன்னும் நினைவில் பசுமையாக உள்ளது. அப்போது எங்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால் முழு உற்சாகம் கொண்ட இதயம் இருந்தது. எங்கள் பயணத்தில் இந்த நாள் எப்போதும் சிறப்பானதாக இருக்கும் என்று எழுதியுள்ளார்.