பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் மார்ச் மாதம் வெளியான ‘எல் 2 எம்புரான்’ திரைப்படம் மலையாள திரையுலகின் அதிகம் வசூலித்த படமாக ரூ.250 கோடிக்கு மேல் ஈட்டியது. அந்தப் படத்துக்குப் பிறகு சில நாட்களில் ‘தொடரும்’ திரைப்படமும் வெளியானது.

தருண் மூர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் மோகன்லால், ஷோபனா மற்றும் பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வெளியான மூன்று நாட்களிலேயே ரூ.69 கோடி வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோகன்லால் நடித்த இரு திரைப்படங்களும் தொடர்ச்சியாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘தொடரும்’ படம் ரூ.100 கோடி வசூலை விரைவில் எட்டும் என எதிர்பார்ப்பு தற்போது நிலவி வருகிறது.
மோகன்லால் மலையாள திரையுலகில் முதல் முறையாக 100 கோடி வசூல் சாதனை செய்த நடிகராக கருதப்படுகிறார். அவர் நடித்த ‘புலிமுருகன்’ (2016) திரைப்படமே மலையாள திரையுலகின் முதல் 100 கோடி படம். அதன் பிறகு அவர் நடித்த ‘லூசிபர்’ (2019) மற்றும் ‘எல் 2 எம்புரான்’ (2025) ஆகிய படங்களும் 100 கோடி வசூலை கடந்தன. ‘தொடரும்’ படம் ரூ.100 கோடி வசூலை எட்டினால், அது மோகன்லாலின் நான்காவது 100 கோடி வசூல் படம் ஆகும். மேலும், 2013ஆம் ஆண்டு வெளியான ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் மூலம் மலையாள திரையுலகில் முதல் 50 கோடி வசூல் சாதனை செய்த முதல் நடிகராகவும் மோகன்லால் திகழ்கிறார்.