மலையாள சினிமாவில் மோகன்லால் நடித்த பழைய சூப்பர் ஹிட் படங்கள் சமீப காலமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு தொடர்ந்து வெற்றியை பெற்று வருகின்றன. அதேபோல சில நாட்களுக்கு முன் 2001ஆம் ஆண்டு அவர் இரண்டு வேடங்களில் நடித்த ‘ராவண பிரபு’ திரைப்படம் டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. தற்போது அந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இயக்குநர் ரஞ்சித் இயக்கிய இந்தப் படத்தில் வசுந்தரா தாஸ் ஹீரோயினாக நடித்திருந்தார். சமீபத்தில் வசுந்தரா தாஸ், ‘ராவண பிரபு’ படத்தின் ரீ-ரிலீஸ் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தப் படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி அவர் கூறியதாவது “இந்த படத்தில் நடிக்க எனக்கு ஆஃபர் வந்தபோது நான் ‘சிட்டிசன்’ படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தேன். அப்போது இந்த ஆஃபரை ஏற்கலாமா வேண்டாமா என்று தயங்கினேன். ஆனால் இயக்குனர் ரஞ்சித், ‘இந்தப் படத்தில் ஜானகி கதாபாத்திரத்தை நீங்கதான் சரியாக நடிக்க முடியும்’ என்று உறுதியாக சொல்லி என்னை சம்மதிக்க வைத்தார். சிலர் கூட என்னை நடிக்க வைக்க வேண்டாம் என அவரிடம் கூறியிருந்தார்கள்.
ஆனா அவர் அதைக் கவனிக்காமல் என்னை தேர்வு செய்தார். அதனால்தான் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். படம் ரிலீஸ் ஆன பிறகுதான் அது எனக்கு எவ்வளவு பெரிய பெயரை கொடுத்தது என்பதை உணர்ந்தேன். இன்று உலகில் எங்குச் சென்றாலும் யாராவது என்னைப் பார்த்து, ‘நீங்க வசுந்தரா தாஸ் தானே?’ என்று கேட்பார்கள். அடுத்த நொடியே ‘நாங்க மலையாளத்துல இருந்து வந்தவங்க’ என்று சொல்லும் போது, ‘ராவண பிரபு’ படம் என்னை மலையாள ரசிகர்களிடம் எவ்வளவு நெருக்கமாக்கியிருக்கிறது என்பதை உணர முடிகிறது,” என்று கூறினார்.