தெலுங்குத் திரையுலகின் முக்கியமான குடும்பங்களில் ஒன்றாகும் நடிகர் மோகன் பாபுவின் குடும்பம். ரஜினிகாந்தின் மிக நெருங்கிய நண்பராகிய மோகன் பாபுவின் மூத்த மகன் விஷ்ணு மஞ்சு, இளைய மகன் மஞ்சு மனோஜ் மற்றும் மகள் லட்சுமி மஞ்சு ஆகியோரும் தெலுங்கு திரைப்பட உலகில் தொடர்ந்து நடித்து வருகிறார்கள்.

விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடித்த கண்ணப்பா திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அந்த படம் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தாலும், வசூல் ரீதியில் பெரிய அளவிலான வரவேற்பைப் பெறவில்லை. அதே சமயம் மஞ்சு மனோஜ் வில்லனாக நடித்த மிராய் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. தற்போது அது 100 கோடி வசூலை நெருங்கிக் கொண்டு வருகிறது. அந்தப் படத்தில் மனோஜின் வில்லத்தன நடிப்பை திரையுலகினரே பாராட்டி வருகின்றனர்.
இயக்குநர் சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் தனுஷ், சாயா சிங் நடித்தும் வெற்றிபெற்ற திருடா திருடி திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான தொங்கா தொங்கடி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் மஞ்சு மனோஜ். அதன் பின்னரும் தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார். சூரி, சசிகுமார் நடித்த கருடன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான பைரவம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராகவும் நடித்தது குறிப்பிடத்தக்கது.