கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் கிச்சா சுதீப், ‘நான் ஈ’ மற்றும் ‘புலி’ படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது அவர் நடித்து வரும் ‘மேக்ஸ்’ என்ற ஆக்சன் திரில்லர் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளார். இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கி, வி கிரியேசன்ஸ் சார்பில் எஸ். தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் சுதீபா, வரலட்சுமி சரத்குமார், சம்யுக்தா ஹொர்னாட், சுக்ருதா வாக்லே மற்றும் அனிருத் பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பை பி. அஜனீஷ் லோக்நாத் மேற்கொண்டுள்ளார்.

‘மேக்ஸ்’ திரைப்படம் கடந்த டிசம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. வெளியீட்டு நாளிலிருந்தே இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. வசூல் ரீதியிலும் விமர்சன ரீதியிலும் வெற்றி கண்டிருக்கும் இந்த படத்திற்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

பிரபல நடிகரும் இயக்குநருமான ஆர். பார்த்திபன், ‘மேக்ஸ்’ திரைப்படத்தை பாராட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “மேக்ஸிமம் ஆக்சன் கொண்ட இப்படம் மிகவும் தத்ரூபமான திரைக்கதை மற்றும் கதையோடு ஒட்டியிருக்கிறது. என்னிடம் வேலை செய்த விஜய வானன் இன்று விஜய் கார்த்திகேயாவாக மாறி அற்புதமான ஒரு படத்தை இயக்கியுள்ளார் என்பதால் இந்த படத்தை நான் கூடுதல் ஆர்வத்துடன் பார்த்தேன். சிறிய தொய்வும் இல்லாமல் படத்தின் இறுதி வரை மனதை கட்டிப்போட்டுள்ளார்.
நண்பர் தாணுவுக்கு முதலில் வாழ்த்து தெரிவித்த பிறகு, நாயகன் சுதீப்பிடம் பேசினேன். நான் எந்த படம் பார்த்தாலும் பிடித்துவிட்டால், இரவெல்லாம் அந்த படத்துக்காகப் பாராட்டுகள் தெரிவித்து விடியும். சுதீப் பைட் செய்யும் போது, மாஸ்டர் சொல்லிக் கொடுத்து செய்கிறார் போல தெரியவில்லை. அவரது பாடி லாங்குவேஜ் மற்றும் நடிப்பின் வழியாக அவர் ஆக்சனில் ஒரு அசாதாரண அளவை காட்டியுள்ளார். 25 ஆண்டுகள் பைட் செய்து வரும் ஒரு இயக்குநரால் கூட அவரை கொண்டாட முடியுமென நினைக்கிறேன். இனி பலரும் அவரை கொண்டாடுவார்கள் என்பதில் சந்தோஷம்,” என்று கூறியுள்ளார்.