மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படத்தில், நடிகர் வடிவேலு மற்றும் பகத் பாசில் இணைந்து நடித்த காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வெற்றியின் தொடர்ச்சியாக, இப்போது இவர்கள் இருவரும் சுதீஷ் சங்கர் இயக்கியுள்ள ‘மாரீசன்’ திரைப்படத்தில் மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். இந்த படம், ஜூலை 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில், பகத் பாசில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், ‘மாரீசன்’ படத்தைப் பற்றிய தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, இந்தப் படத்தின் தயாரிப்பு செலவு அதிகமாக இருந்தது. காரணம் படத்தின் படப்பிடிப்பு பல இடங்களில் நீளமான காலம் நடைபெற வேண்டி வந்தது. இடையிடையே பெய்த மழையால், திட்டமிடப்பட்ட தேதிகள் மாற்றப்பட வேண்டியது ஏற்பட்டது. சில முக்கிய காட்சிகள் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே படமாக்க வேண்டிய சூழலும் இருந்தது.
இந்தப்படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் யாரையும் முழுமையாக நம்ப முடியாதவர்கள். ஒவ்வொருவரும் வேறுபட்ட தன்மை உடையவர்கள். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைச் சரியாகக் கணிக்க முடியாது. ஆனால், இந்தப் படத்தில் வரும் பெண்கதாபாத்திரங்களை மட்டும்தான் நம்ப முடியும். இந்தக் கதை மிக சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. அந்த எழுத்தைத் துல்லியமாக திரைப்படமாக்கியிருக்கின்றனர். இப்படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வமாக உள்ளதைப் போல் நானும் பெரிதும் ஆர்வமாக இருக்கிறேன் என பகிர்ந்துள்ளார்.