இயக்குநர் லிங்குசாமி சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில், “எந்த நல்ல படங்கள் வெளியானாலும், அந்த படங்களை இயக்கிய இயக்குநர்களை நேரில் சந்தித்து பாராட்டுவேன். ‘சில்லுக்கருப்பட்டி’, ‘காக்கா முட்டை’ போன்ற படங்கள் வெளியானபோது, அந்த படங்களின் இயக்குநர்களை நேரில் அழைத்து பாராட்டியதுண்டு. சமீபத்தில் வெளியான ‘அமரன்’ மற்றும் ‘லப்பர் பந்து’ எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அந்த இரண்டு படங்களின் இயக்குநர்களும் அற்புதமாக இயக்கியிருக்கிறார்கள். ‘லப்பர் பந்து’ படத்தில் தினேஷ் மிக சிறப்பாக நடித்திருந்தார். ‘டான்’ மற்றும் ‘டாடா’ படங்களின் இயக்குநர்களும் மிக நன்றாக இயக்கியிருந்தார்கள். அதேபோல், நான் ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோரின் படங்களையும் கண்டிப்பாகப் பார்ப்பேன். வெற்றிமாறன் பல ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறார். இருந்தாலும், இன்றுவரை புதிய இயக்குநர்களுடன் போட்டிபோடும் அளவிற்கு முன்னணியில் இருக்கிறார். வெற்றிமாறன் சார் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை, தெலுங்கு மற்றும் பாலிவுட் நடிகர்களுக்கு கூட உள்ளது. பெரிய ஹீரோக்களே கூட இதைப் பற்றி பேசுவதைக் கேட்டிருக்கிறேன். ராம் சரண், அல்லு அர்ஜூன், ஜூனியர் என்.டி.ஆர் போன்ற நடிகர்கள் எல்லாரும் வெற்றிமாறன் படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “மிக முக்கியமான இயக்குநர்கள் சமீப காலங்களில் அதிகமாக வந்துவிட்டார்கள். கார்த்திக் சுப்புராஜ் காலக்கட்டம் வரையிலான இயக்குநர்களின் பெயர்கள் எல்லாம் என் நினைவில் இருக்கின்றன. ஆனால், அதன்பிறகு வந்த இயக்குநர்கள் ஒரு அல்லது இரண்டு படங்களுக்குப் பிறகு தொடர்ந்து பணியில் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. ஆனால், நிறைய புதிய இயக்குநர்கள் சிறப்பாகப் படங்களை இயக்கி வருகிறார்கள்” என்று தெரிவித்தார்.