இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதி, மாரடைப்பால் சென்னையில் நேற்று காலமானார். சில வாரங்களுக்கு முன் இதய பிரச்னையால் ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்து கொண்டு வீட்டில் ஓய்வில் இருந்த வந்த மனோஜிற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட அவரது உயிர் பிரிந்தது. மனோஜின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.தாஜ்மகால் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான மனோஜ், தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, மாநாடு, விருமன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மனோஜின் உடல் முன்னதாக சென்னை, சேத்துபட்டில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு பல பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்ட மனோஜின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு பல திரைப்பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். நீலாங்கரையில் தான் நடிகர் விஜய்யின் வீடு உள்ளது. அவர் நடந்தே சென்று மனோஜ் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதேப்போல் நடிகர்கள் சூர்யா, சிவகுமார், சரத்குமார், கேஎஸ் ரவிக்குமார், பிரபு, சுரேஷ் காமாட்சி, லிங்குசாமி, ஆர்கே செல்வமணி, நாம் தமிழர் கட்சியின் சீமான், பாலாசிரியர் வைரமுத்து, கார்த்தி, டி சிவா, மாரி செல்வராஜ், ராம், ராஜ் கபூர், சித்ரா லட்சுமணன், இளவரசு, மணிரத்னம் உள்ளிட்ட ஏராளமான திரைக்கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இன்று மாலை 4:30 மணியளவில் பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் மனோஜ் உடல் தகனம் செய்யப்படுகிறது.