கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் சிதம்பரம் இயக்கத்தில் “மஞ்சும்மேல் பாய்ஸ்” திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் கேரள இளைஞர்களில் ஒருவர் குணா குகையில் தவறி விழுவதும், அவரை காப்பாற்ற பிற இளைஞர்கள் எடுக்கும் முயற்சிகளும் படத்தின் கதையாக இருக்கிறது.

சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அதோடு, பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு வருகிறது. தற்போது, ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெறும் கினோபிராவோ சர்வதேச திரைப்பட விழாவில் இந்த படத்தை திரையிட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து போட்டிப் பிரிவில் கலந்து கொண்ட ஒரே திரைப்படம் இதுதான். படம் திரையிட்டு முடிந்தபின் ரசிகர்கள் கண்கலங்கினார்கள், மேலும் கேள்வி பதில் பகுதியில் படம் குறித்தும் குகையின் உருவாக்கம் பற்றியும் நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டன என்று இயக்குநர் சிதம்பரம் தனது சோசியல் மீடியா மூலம் வெளியிட்டார்.