விஜய் சேதுபதி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தலைவன் தலைவி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைப்பெற்றது. அவ்விழாவில் பேசிய இயக்குநர் பாண்டிராஜ், குடும்பக் கதையம்சம் கொண்ட படங்களை உருவாக்குவது மிகவும் சவாலானது என தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “ஒரு குடும்பப் படம் எடுக்கவேண்டும் என்றாலே சிலர் அதை சீரியல் போன்றதாக கூறிவிடுவார்கள். உண்மையில், குடும்பப் படம் எடுப்பது மிகவும் கடினமான விஷயம். ஆனால் சமீப காலமாக ‘லப்பர் பந்து’, ‘குடும்பஸ்தன்’, ‘டூரிஸ்ட் பேமிலி’, ‘மாமன்’ போன்ற படங்களை மக்கள் விரும்பிப் பார்ப்பதைக் காண்கிறோம். தற்போது என்னை அணுகும் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் அனைவரும் குடும்பக் கதைகளை விரும்பி எதிர்பார்க்கின்றனர். நான் அதை நிராகரிக்கவில்லை.

‘கடைகுட்டி சிங்கம்’ படம் வெற்றி பெற்றதும், சிவகார்த்திகேயன் என்னிடம் ‘இந்த மாதிரி ஒரு படம் எனக்கு செய்யுங்கள்’ என்று கேட்டார். அதனால் தான் ‘நம்ம வீட்டு பிள்ளை’ படம் வந்தது. இப்போது ‘தலைவன் தலைவி’ ஓடினால், மேலும் ஹீரோக்கள் இதுபோன்ற படங்களைத் தேர்வு செய்வார்கள்.
‘தலைவன் தலைவி’ ஒரு பொதுமக்கள் பார்வைக்கு ஏற்ற, அனைவரையும் சென்றடையும் படம்” எனக் கூறினார். பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள ‘தலைவன் தலைவி’ படம் ஜூலை 25ஆம் தேதி திரைக்கு வருகிறது.