தமிழ் சினிமாவில் அண்மைய ஆண்டுகளில் மிகப்பெரிய முதலீடுகளுடன் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட படங்களுக்கு பின்னால் இருந்த முக்கியமான நிறுவனம் லைகா புரொடக்ஷன்ஸ் ஆகும். ‘2.0’, ‘பொன்னியின் செல்வன் 1’ மற்றும் ‘பொன்னியின் செல்வன் 2’ போன்ற மெகா படங்கள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். இவற்றுடன் சேர்த்து பல படங்களை தனியாகவும், கூட்டாகவும் தயாரித்து வந்தனர்.

இந்நிலையில், ‘லால் சலாம்’, ‘இந்தியன் 2’, ‘வேட்டையன்’, ‘விடாமுயற்சி’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வரவேற்பையும் வசூலையும் பெற முடியாமல், தோல்வியடைந்தன. மேலும், மலையாளத்தில் தயாரிக்கப்பட்ட ‘எல் 2 எம்புரான்’ என்ற படத்திலிருந்து கடைசி நேரத்தில் விலகியதாகவும் கூறப்பட்டது. இருப்பினும், அந்த படத்தில் அவர்கள் பெயர் விளம்பரங்களில் இடம்பெற்றது. இதனால் லைகா புரொடக்ஷன்ஸ் குறித்து பல்வேறு ஊகங்கள் திரையுலகத்தில் பரவி வந்தன. இந்நிலையில், இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல் சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடப்பு நிலையில், லைகா தயாரிக்க உள்ள ஒரே படம் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் நடிக்கும் படம் தான் எனக் கூறப்படுகிறது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் சிம்புவும் அவர்களது தயாரிப்பில் நடிக்க ஒப்புதல் அளித்துள்ளனர். தற்போது, சுமார் 10 படங்களை உருவாக்கும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. இந்த முறையில், படத்தின் தேர்வு, கதையின் தரம் மற்றும் இயக்குநரின் தேர்விலும் மிகுந்த கவனம் செலுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. விரைவில் பல புதிய அறிவிப்புகள் வெளிவரும் வாய்ப்புள்ளது.