தென்னிந்திய திரைப்படத் துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். அவரது நடிப்பில், பிரபல மலையாள நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜ் இயக்கிய ‘லூசிபர்’ என்ற திரைப்படம் 2019ஆம் ஆண்டு வெளியானது. அந்தப் படத்தின் தொடர்ச்சியாக தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘எல் 2 எம்புரான்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் மோகன்லால் “குரேஷி ஆபிராம் ஏ. கே. ஸ்டீபன் நெடும்பள்ளி” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உலகம் முழுவதும் பிரசித்திபெற்ற ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ தொடரில் நடித்த ஜெரோம் பிளின் இந்தப் படத்தில் நடித்துள்ளதாலும், இந்தப்படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
மோகன்லால் இதுவரை நடித்துள்ள திரைப்படங்களில் இதுவே மிக உயர்ந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட திரைப்படமாகும். இந்த படம் வரும் மார்ச் 27ஆம் தேதி திரையிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குமுன், இந்தப்படம் டிக்கெட் விற்பனையில் சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, 24 மணி நேரத்திற்குள் அதிக அளவில் முன்பதிவு செய்யப்பட்ட இந்திய திரைப்படமாக எம்புரான் புதிய வரலாறு படைத்துள்ளது.
இந்த சூழலில், படத்தின் விளம்பர நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இயக்குநர் பிருத்விராஜும் நடிகர் மோகன்லாலும் கலந்து கொண்டனர். அந்த நேரத்தில், ‘லூசிபர்’ திரைப்படத்தின் மூன்றாம் பாகம் குறித்த தகவலை பிருத்விராஜ் பகிர்ந்தார். அவர் கூறுகையில், “எம்புரான் படத்தின் வெற்றி எப்படி இருக்கிறது என்பதையே பொறுத்து, ‘லூசிபர்’ மூன்றாம் பாகம் உருவாகும்” என்றார். இதனுடன் மேலும் ஒரு பேட்டியில் பேசிய அவர், “மோகன்லால் சார் இந்தப் படத்தில் 41 நிமிடங்களுக்கே நடித்துள்ளார். இதே மாதிரியாகவே இந்த மூன்று படங்களும் இருக்கப் போகின்றன. மோகன்லால் சாரின் கதாபாத்திரம் மிகவும் சிக்கலானது. ஏனெனில் அவரை முழு நேரமும் காட்டினால், ரசிகர்கள் அவரின் மீது வைத்திருக்கும் ஈர்ப்பை இழக்க நேரிடும்” என்று தெரிவித்தார்.