சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகளவில் வெளியிடப்பட இருக்கிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அந்தப் பணியின் ஒரு பகுதியாக, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது பழைய கல்வி நிறுவனமான கோவை PSG கல்லூரிக்கு சென்றிருந்தார்.

அங்கு நடந்த நிகழ்ச்சியில் பேசும் போது, லோகேஷ், “விஜய் சார் இல்லாமல் LCU (லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ்) இல்லை. ஆனால் அவர் மீண்டும் அதில் இணைவாரா இல்லையா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். அவருடைய எண்ணங்களும், முயற்சிகளும் நமக்குத் தெரியும். எனவே, இது குறித்து நான் இப்போது பதிலளிக்க முடியாது. ஆனால், அவர் இல்லாமல் LCU முழுமை அடையாது என்பது உண்மை,” என்றார்.
விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ஏற்கனவே ‘மாஸ்டர்’ மற்றும் ‘லியோ’ திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. ‘லியோ’ கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூலில் வெற்றி பெற்றது. விஜய் LCU-வில் மீண்டும் தோன்றுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.