ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவான ‘லீச்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. முழுக்க புதிய மலையாளத் திரைக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தை எஸ். எம். ராஜன் எழுதி இயக்கியுள்ளார்.இந்த படத்தை புக் ஆஃப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார். அருண் டி. சசி ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரண் ஜோஸ் இசையமைத்துள்ளார், மேலும் படத்தொகுப்பு பணிகளை ஆல்வின் டாமி மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் பாடல்களை ரஃபீக் அஹமத், விநாயக் சசிகுமார், அனூப் ரத்னா ஆகியோர் எழுதியுள்ளனர். பாடகர்கள் ஹரிச்சரன், கீர்த்தனா மற்றும் ஸ்மிதா பாடல்களை பாடியுள்ளனர்.

லீச் திரைப்படத்தின் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை ஜாலி டேவிசன் சி.ஜே. மேற்கொண்டுள்ளார். நடனத்தை ஷெரிப் மாஸ்டர் மற்றும் ஷிபு கவனித்துள்ளனர். சண்டைப் பயிற்சியை டேஞ்சர் மணி வழங்கியுள்ளார். இப்படத்திற்கு ராஜூ கோவிலகம் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். இந்த படத்தை எஸ். எஃப். சி. ஆர்ட்ஸ் வெளியிடுகிறது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் பேரரசு, உரையாற்றும்போது கூறியதாவது: “இசைஞானி இளையராஜாவின் பாடல்களை நாம் கேட்கும் போதும் ரசிக்கும் போதும் மகிழ்ச்சி கிடைக்கும். ஆனால், இந்த மேடையில் அவரின் பாடல்களை நிஜாம் பாடியபோது எனக்கு பதற்றமாக இருந்தது. காரணம், தற்போது காப்பிரைட் விஷயம் அதிகமாக கவலைக்கிடமாக உள்ளது. இதைச் சிறிது குறைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாடலை பாடும் போது மனநிறைவு, மகிழ்ச்சி கிடைக்கிறது. நீங்கள் பாடலை கேட்பதற்காக மட்டுமே உள்ளீர்களா? நாங்களும் பாடல்களை பாடக்கூடாதா? இல்லையென்றால் நேரடியாகவே சொல்லிவிடலாம், ‘என் பாடல்களை யாரும் பாடக்கூடாது’ என்று. திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்கள், நட்சத்திர ஓட்டல்களிலும் பாடப்படுகின்றன. அவற்றிற்காக காப்பிரைட் தொகை வசூலிக்கலாம்.
இந்த மேடையில் நிஜாம் அழகாக பாடினார். அவரது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக இளையராஜாவின் பாடல்கள் அமைந்தன. இதை ஒரு பாக்கியமாகவே கருத வேண்டும். ஆரம்ப காலத்தில் அனைத்து திரைப்படப் பாடல்களும் கிராமிய பாடல்கள், கும்மிப் பாடல்களை அடிப்படையாக கொண்டு உருவானவை. அதன் பிறகே இசையமைப்பாளர்கள் தங்களது தனித்துவமான இசையை சேர்த்தனர்.
இங்கு படக்குழுவினர் முழுவதும் கேரளாவிலிருந்து வந்துள்ளவர்கள். அவர்கள் மலையாளத்தில் பேசினாலும், அதை புரியவைக்கின்றனர். ஆனால், நாம் தமிழ் கலந்த மலையாளம் பேசி அவர்களிடம் புரிய வைக்க முடியாது. ஒருவருக்கு இன்னொரு மொழி தெரிந்திருப்பது தவறல்ல. இங்கு பலரும் இருந்தபோதிலும், அவர்கள் மலையாளத்தில் பேசியே புரிய வைத்துவிட்டனர். ஆனால், நம்மால் அவ்வாறு முடியாது. குறிப்பாக, என்னால் முடிவதில்லை. தமிழ் சினிமாவிற்கு மொழி தடையாக இருக்காது. நாம் அனைவரையும் அரவணைப்போம்,” என்று தெரிவித்தார்.