பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ள எமர்ஜென்சி படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படம் கடந்த மாதம் 6ஆம் தேதி வெளியாவதாக இருந்தது, ஆனால் சென்சார் போர்டு சான்றிதழ் வழங்காமலே தொடர்ந்து இழுத்தடித்து வருகிறது. இதனால், கங்கனா ரனாவத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்த ஜீ டிவி நிர்வாகம் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, சென்சார் போர்டு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபினவ் சந்திரசூட், “எமர்ஜென்சி படத்தில் 13 இடங்களில் திருத்தம் செய்யுமாறு கேட்டிருக்கிறோம். அதில் 4 இடங்களில் வெட்டவும், 3 இடங்களில் திருத்தவும், 6 இடங்களில் புதிதாக சேர்க்கவும் கூறியுள்ளோம். இவற்றைச் செய்து முடித்தால், யு.ஏ சான்று வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும், படத்தில் சீக்கியர்கள் அல்லாதவர்களை சீக்கியர்கள் துப்பாக்கியால் சுடுவது, காலிஸ்தான் போன்ற விஷயங்களை அகற்றுமாறு கேட்டுள்ளோம். சஞ்சய் காந்தி மற்றும் ஜெயில் சிங் இடையே நடைபெறும் உரையாடலில் சில வார்த்தைகளை மாற்றுமாறி கூறியுள்ளோம். சீக்கிய அமைப்புகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்சார் போர்டு முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என குறிப்பிட்டார்.

சென்சார் போர்டு பரிந்துரைகளை எதிர்த்து கங்கனா ரனாவத் கடுமையான அதிருப்தி வெளியிட்டுள்ளார். அவர் பேட்டியில், “சென்சார் போர்டு கூறிய சில பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அவர்கள் கூறும் சில திருத்தங்கள் நியாயமற்றவை. இப்படத்தின் நம்பகத்தன்மையை காக்க நாம் உறுதியாக இருக்கிறோம். வரலாற்று ஆய்வாளர்களும், மறு ஆய்வுக்குழுவும் இப்படத்தை பாராட்டியுள்ளனர். படம் 100% உண்மையிலிருந்து விலகாததாகவே உள்ளது. இப்படத்திற்காக போராடத் தயார்” என தெரிவித்துள்ளார்.