திரைப்பட உலகை தனது பாடல்களால் பொருள் நிறைந்த ஒரு கலையாக மாற்றியவர் கவிஞர் கண்ணதாசன். அனைத்து மதங்களின் கடவுள்கள், வரலாற்று நாயகர்கள், புராண இதிகாசங்களில் வரும் வேந்தர்கள், சாதாரண மனிதர்கள் என பல்வேறு வடிவங்களில் மனித உணர்வுகளை நம் கண் முன் நிறுத்தியவர் அவர். எம்.எஸ். விஸ்வநாதனின் நாதம் என்றால் கண்ணதாசனின் கீதம் என்று சொல்லலாம். அதேபோல் கே.வி. மகாதேவனின் தேவராகம் என்றால் கண்ணதாசனின் தேவகானம் என்பதும் உண்மை. இந்த மூவரும் இணைந்து பணியாற்றிய காலம் தமிழ் திரைக்கு மட்டுமல்ல, தமிழ் மொழிக்கே ஒரு பொற்காலம் என்று கூறலாம்.

இன்று (அக்டோபர் 17) கண்ணதாசனின் நினைவு நாள். இதை முன்னிட்டு நடிகர் கமல் ஹாசன் தனது பதிவில், “அய்யா, இன்று நீங்கள் இறந்ததாகச் செய்தி பரவி இருக்கிறது. ஆனால் காவியக் கவிதைகளுக்கு மரணம் இல்லை என்பதை பலர் அறிவார்கள். எனக்கோ, அவர் பற்றிய பேச்சு காதில் பட்டாலே அது நினைவு நாளாகிறது. அவர் கவிதையை வாசித்தால் அது எனக்குப் பிறந்த நாளாகிவிடுகிறது. எந்த நிலையிலும் உமக்கு மரணம் இல்லை. வாழும் அனைத்து கவிஞர்களுக்கும் என் வணக்கங்கள். என்றென்றும் உங்கள் நான்,” என எழுதியதுடன், அவருடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
மேலும் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், கண்ணதாசன் எழுதிய கடைசி பாடல் கமல் ஹாசன் நடித்த மூன்றாம் பிறை திரைப்படத்தின் “கண்ணே கலைமானே…என்ற பாடலாகும்.