தமிழ் திரைப்பட உலகில் கடந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக தமிழ் மட்டுமின்றி இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்துவரும் இருவர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். தங்கள் ஆரம்ப காலங்களில் சில படங்களில் இணைந்து நடித்திருந்தாலும், பின்னாளில் தனித்தனியாக கதாநாயகர்களாக நடித்து, பல உச்சங்களை அடைந்து தமிழ் சினிமாவின் இரு கண்களாக இருக்கின்றனர்.

அரசியல் பார்வையில் இருவருக்கும் வித்தியாசமான எண்ணங்கள் இருந்தாலும், இன்று வரை அவர்களுடைய இனிய நட்பு தொடர்கிறது.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திமுகவின் ஆதரவுடன் ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். விரைவில் எம்பியாக பதவியேற்க உள்ள அவர், தனது நீண்டநாள் நண்பர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்து தனது எம்பி சான்றிதழைப் காண்பித்து, அவரது வாழ்த்துகளை பெற்றுள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன், என் புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்துடன் பகிர்ந்ததில் மகிழ்ச்சி அடைந்தேன்” என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.