துபாயில் நடைபெற்ற ஒரு தனியார் விருது வழங்கும் விழாவில், நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்துடன் இணைந்து திரைப்படம் எடுக்கப் போவதாக உறுதி செய்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த நடிகர் சதீஷ், “உங்களும் ரஜினிகாந்த் சேர்ந்து படம் எடுக்கப் போகிறீர்கள் என்று கேள்விப்பட்டோம். அது உண்மையா?” என்று கேட்டார். அதற்கு கமல்ஹாசன், “அது தரமான சம்பவமா இல்லையா என்பதை படம் பார்த்த பிறகு ரசிகர்களே சொல்ல வேண்டும். தரம் எப்படி இருக்கிறது என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். நாங்கள் தருகிறோம். ஆனால் படம் தொடங்குவதற்கு முன்பே அது தரமானது என்று கூறக்கூடாது. அப்படிச் சொன்னால் திடீரென தரம் குறைந்துவிட்டதாக இழுத்துவிடுவார்கள். அதனால் நாங்கள் படம் செய்து முடித்த பிறகு தான் காட்டுவோம்.

நாங்கள் இருவரும் சேர்ந்து படம் செய்தது மிகவும் பழைய விஷயம். முன்னாள் நாட்களில் நாங்களே விரும்பி பிரிந்து தனித்தனி படங்களில் நடித்தோம். அப்போது எங்களுக்கு அரை பிஸ்கெட் கொடுத்தார்கள், ஆனால் நாங்கள் தனித்தனியாக ஒரு முழு பிஸ்கெட்டைக் கையிலே எடுத்து சாப்பிட்டோம். இப்போது மீண்டும் அந்த அரை பிஸ்கெட்டே போதும் என்று நினைக்கும் நிலைக்கு வந்துவிட்டோம். எனவே நாங்கள் மீண்டும் ஒன்றாக வருகிறோம்.
எங்களுக்குள் எப்போதும் போட்டி இல்லை. அந்த போட்டியை ரசிகர்களே உருவாக்கினார்கள். எங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததே பெரிய விஷயம். அப்போதே நாங்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அவர் அப்படித்தான் இருக்கிறார், நானும் அப்படித்தான் இருக்கிறேன். எனவே நாங்கள் சேர்ந்து வேலை செய்வது வணிக ரீதியாக புதிதாகவும், ஆச்சரியமாகவும் இருக்கலாம். ஆனால் எங்களுக்குள் அது எப்போதோ நடக்க வேண்டிய ஒன்று, இப்போது நடந்தால் பரவாயில்லை என்ற மனநிலையில்தான் இருக்கிறோம். முன்னர் மற்றவர் படத்தை தயாரிக்க ஆசைப்பட்டோம். ஆனால் “வேணாம், நல்லபடி சென்று கொண்டிருக்கிறது” என்று நாங்களே எங்களைத் தடுத்துக்கொண்டோம்” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.