‘கே.ஜி.எப்’ திரைப்படங்களின் மூலம் இந்திய திரையுலகத்தின் கவனத்தை கன்னட சினிமைவை நோக்கி திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் பிரசாந்த் நீல், தற்போது தொடர்ந்து பல பெரிய படங்களில் பணியாற்றி வருகிறார். அவர் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் ‘சலார்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதற்கிடையே தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க உள்ள 31வது படத்தையும் பிரசாந்த் நீல் இயக்கவுள்ளதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த படம் ஒரு பான் இந்தியா படமாக உருவாகவுள்ளது. இதற்கான பட்ஜெட் சுமார் ரூ. 350 கோடி ஆகும். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன. ‘NTR-31’ என்ற இந்தப் படம் கடந்த ஜனவரி மாதத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்நிலையில், ஏப்ரல் 22ஆம் தேதி படப்பிடிப்பில் ஜூனியர் என்.டி.ஆர் கலந்துகொள்ள உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்திற்காக ஜூனியர் என்.டி.ஆர் தனது எடையை 15 கிலோ வரை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதை உறுதி செய்யும் வகையில், படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த படம் 2026ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நாளில் நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படமும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.