மலையாள திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜோஜு ஜார்ஜ். இவர் தமிழில் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். தற்போது கமலஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்துப் பணிகளை முடித்துள்ளதுடன், சமீபத்தில் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படத்திலும் நடித்துள்ளார். நடிகராக மட்டும் இல்லாமல், இதுவரை ஏழு திரைப்படங்களை தயாரிப்பாளராகவும் உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் ஜோஜு ஜார்ஜ் தானாகவே இயக்கி நடித்த ‘பணி’ என்ற படம் வெளியாகி இருந்தது. இதில் ‘நாடோடிகள்’ படத்தில் நடித்த அபிநயா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரில்லர் வகையில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘பணி 2’ மற்றும் ‘பணி 3’ என தொடர்ச்சியாக அடுத்த பாகங்களை ஜோஜு ஜார்ஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், தற்போது நடிகரும் இயக்குனருமான ஜோஜு ஜார்ஜ் ‘பணி 2’ குறித்த புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது, ‘பணி 2’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கும் எனக் கூறும் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் டிசம்பர் மாதத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த பணி 2 திரைப்படம் முதற்கட்ட பாகத்துடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாமல், புதிய கதாபாத்திரங்களையும், புதிய இடங்களையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.