Touring Talkies
100% Cinema

Monday, March 10, 2025

Touring Talkies

மூன்று வருடங்களாக நான் சிங்கிள் தான்… பார்வதி திருவொத்து டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள நடிகை பார்வதி, எப்போதும் சிறந்த கதைகளையும் தரமான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிக்கக் கூடியவர். இதன் காரணமாக, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் இருந்தாலும், குறைந்த எண்ணிக்கையிலேயே படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு, அவர் நடித்த மலையாள படமான ‘உள்ளொழுக்கு’, தமிழில் வெளியான ‘தங்கலான்’ ஆகிய இரு படங்களும் விமர்சன ரீதியாக சிறப்பான பாராட்டுகளை பெற்றன. அவருக்குப் பிறகு திரையுலகுக்கு வந்த நடிகைகள் பலரும் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்ட நிலையில், எந்தவிதமான கிசுகிசுவிலும் சிக்காமல் இருந்த பார்வதி, சமீபத்திய பேட்டியில் தன் காதல் வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: “நான் இதுவரை சிலருடன் காதல் தொடர்பில் இருந்துள்ளேன். ஒருவரை காதலிப்பதற்கு முன், அவரைப் பற்றியும், அவருடன் வாழ்நாள் முழுவதும் பயணிக்க முடியுமா என்பதையும் தெரிந்து கொள்ள, டேட்டிங் என்பது மிகவும் அவசியம். மேலும், அந்த நபர் நம் சினிமா துறையைச் சேர்ந்தவராக இருந்தால், அது இன்னும் மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும். கடந்த காலத்தில் சிலருடன் உறவில் இருந்தபோது, சில தவிர்க்க முடியாத காரணங்களால் பிரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அதில் ஒரு முறை, நான் ஒரு மிகச்சிறந்த மனிதருடன் உறவில் இருந்தேன். எனது மோசமான உணவுப் பழக்கங்களால் அந்த உறவு முறிந்தது என்றால், நீங்கள் நம்புவீர்களா? ஆம், ஒருமுறை எங்களுக்குள் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, நான் மிகவும் பசியாக இருந்தேன், அதனாலே ஒருவேளை கோபம் அதிகமாகி விட்டது. அதைத் தொடர்ந்து, அந்த உறவு முடிந்துவிட்டது. பிறகு ஒருமுறை அவரை மீண்டும் சந்தித்தபோது, நான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன். பொதுவாக, ஒருவருடன் உறவு முடிந்த பிறகும், அவர்களிடமிருந்து முற்றிலும் விலகி விடுவதில்லை. எப்போது சந்தித்தாலும் நல்ல நட்புடன் பேசுவேன்.ஆனால், கடந்த மூன்று வருடங்களாக, நான் சிங்கிளாகவே இருக்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News