நடிகை சுஹாசினி 1980 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகியாக பிரகாசித்தவர். தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். தற்போது அவர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை சுஹாசினி கூறியதாவது: எனக்கு ஆறு வயதாக இருக்கும்போதே காசநோய் பிரச்சினை இருந்தது. அதற்காக சிகிச்சை பெற்றேன். பின்னர் அது குறைந்துவிட்டது. எல்லாம் சரியாகிவிட்டதாக நினைத்திருந்தேன். ஆனால், 36 வயதில் மீண்டும் அந்த நோய் தாக்கியது. இதனால் எனக்கு திடீரென உடல் எடை அதிகரித்துவிட்டது. அதோடு, கேட்கும் திறனிலும் சிக்கல் தொடங்கிவிட்டது. மீண்டும் சிகிச்சை எடுத்தேன்.
சிகிச்சைக்குப் பிறகு படிப்படியாக காசநோயின் பாதிப்பு குறைந்து, நான் குணமடைந்தேன். அப்போது இதை யாரிடமும் சொல்லாமல் மறைத்துவிட்டேன். வெளியே கூறுவதை கௌரவக் குறைவாகவும் எண்ணினேன். ஆறு மாதங்கள் ரகசியமாகவே சிகிச்சை பெற்றேன். இப்போது இதை சமூகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே வெளிப்படையாக கூறுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.