‘ராஞ்சானா’, ‘அட்ராங்கி ரே’ ஆகிய படங்களை தொடர்ந்து, ஆனந்த் எல். ராய், தனுஷ், ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் ‘தேரே இஷ்க் மெயின்’. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு டில்லியில் நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகியாக கிர்த்தி சனோன் நடிக்கிறார்.
நேற்று ஜெய்பூரில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான IIFA டிஜிட்டல் விருது விழாவில் கலந்து கொண்ட நடிகை கிர்த்தி சனோன், இப்படம் தொடர்பாக பேசும் போது, “ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷுடன் சேர்ந்து ‘தேரே இஷ்க் மெயின்’ படப்பிடிப்பில் நடித்து வருகிறேன். டில்லியில் நடைபெறும் படப்பிடிப்பிற்காக மீண்டும் நான் வர வேண்டும், அனைவரும் என்னை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இது ஒரு மிக அழகான திரைப்படம். இதில் எனக்கு ஒதுக்கப்பட்டுள்ள கதாபாத்திரம், இதுவரை நான் நடித்த எந்தக் கதாபாத்திரத்திற்கும் மாறுபட்டதாக இருக்கும்.” என்று தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, “எனக்கு காதல் கதைகள் மிகவும் பிடித்தமான ஜானர். இந்த திரைப்படமும் காதலை மையப்படுத்தி, வித்தியாசமான முறையில் உருவாகி வருகிறது. தனுஷுடன் முதல்முறையாக இணைந்து நடிப்பது மிகவும் சிறப்பான அனுபவமாக உள்ளது. அதுபோல, இந்த படம் கூட மிகச்சிறப்பாக உருவாகி வருகிறது. அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.” என்று கூறினார்.