கேரள மாநிலத்தின் கன்னூர் மாவட்டத்தில் பிறந்தவர் மீனாட்சி தினேஷ். ‘பொரிஞ்சு மரியம் ஜோஸ்’ திரைப்படத்தின் மூலம் திரைப்பட உலகிற்கு அறிமுகமான அவர், பின்னர் ‘மிஷன் சி’, ‘18 பிளஸ்’, ‘ரெட்ட்’ போன்ற மலையாளப் படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘லவ் மேரேஜ்’ என்ற படம் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில், விக்ரம் பிரபுவை வயது வித்தியாசம் பார்க்காமல் காதலிக்கும் கொழுந்தியாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில் அவரது நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதைப்பற்றி அவர் கூறும்போது, “தமிழ் ரசிகர்களிடமிருந்து எனக்கு கிடைத்த அன்பும், வரவேற்பும் என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தது. ‘லவ் மேரேஜ்’ படம் எனக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிய வாய்ப்பு வழங்கியது. இந்த வாய்ப்பை அளித்த படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
பல்வேறு விதமான, சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க நான் எப்போதும் ஆர்வமாக இருக்கிறேன். சினிமாவில் நிலவுகிற ஸ்டீரியோடைப்களை உடைத்து, வலிமையான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். நான் சூர்யா சாரின் மிகப்பெரிய ரசிகை. அவருடன் ஒருநாள் பணியாற்றுவதே என் வாழ்க்கையின் கனவு. அந்தக் கனவு ஒருநாள் நிச்சயமாக நனவாகும் என நம்புகிறேன்” என்றார்.