சமீபத்தில் நடைபெற்ற சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில், பரத் தலைவராக வெற்றி பெற்றுள்ளார். அது மட்டுமல்லாமல், செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட மொத்தம் 22 பதவிகளையும், அவர் தலைமையிலான “சின்னத்திரை வெற்றி அணி” கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

சமீபத்தில் சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் பரத் அளித்த பேட்டியில்: “சங்க உறுப்பினர்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து, பொறுப்பை அளித்திருக்கிறார்கள். அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இன்னும் சில நாட்களில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. சங்கத்தில் மொத்தம் 2,100க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களுக்கு வேலை கிடைக்க செய்வதே எங்களின் முதல் பணி. இனி சங்கத்தில் உறுப்பினராக இல்லாதவர்கள் டிவி தொடர்களில் நடிப்பது கடினமாக இருக்கும். அதற்கான திட்டங்களை விரைவில் கொண்டு வருவோம்.
நான் ஏற்கனவே செயற்குழுவிலும், நிர்வாகப் பதவிகளிலும் இருந்திருக்கிறேன். மற்ற உறுப்பினர்கள் என்னை எளிதாக அணுகி பேசலாம். அந்த நம்பிக்கையால்தான் இவ்வளவு பெரிய வெற்றியை அளித்துள்ளனர். படிப்படியாக உறுப்பினர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து, அவர்களுக்கு நல்லது செய்வோம். தற்போது நான் சில தொடர்களில் நடித்து வருகிறேன். அதைச் செய்யும் போதே சங்கப் பணிகளையும் கவனிப்பேன். ‘உயிரோசை’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளேன். மேலும் சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளேன். இப்போது தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறேன். வருங்காலங்களில் டப்பிங் தொடர் தொடர்பான பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும்” என்றார்.