தமிழில் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்புத் துறையில் அறிமுகமானது தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ். இந்தப் படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து, தமிழகத்தில் லாபம் ஈட்டிய படம் என கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழ்த் திரையுலகில் அந்த நிறுவனத்திற்கு ஒரு நல்ல அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

அந்த நிறுவனமே தற்போது, ‘லவ் டுடே’, ‘டிராகன்’ திரைப்படங்களின் மூலம் புகழ்பெற்ற நடிகர் பிரதீப் ரங்கநாதனை கதாநாயகனாகக் கொண்டு ‘டூட்’ என்ற புதிய திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இதன் பின் தொடர்ச்சியாக, தமிழில் முன்னணி நடிகர்களுடன் புதிய படங்களை உருவாக்கும் நோக்கத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என கூறப்படுகிறது.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடனும் அந்த நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ‘மென்டல் மதிலோ’, ‘அன்டே சுந்தரநிகி’, ‘சரிபொத சனிவாரம்’ போன்ற படங்களை இயக்கிய இளம் இயக்குநர் விவேக் ஆத்ரேயா, அந்தப் படத்தை இயக்கவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் பின், அவரை வைத்து வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் புதிய படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் இயக்குநராக இருப்பார் என்ற தகவலும் முன்பே வந்தது. தற்போது தெலுங்கு நிறுவனம் மற்றும் இயக்குநரின் பெயரும் உறுதி செய்யப்படுவதால், அந்த வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்பது விரைவில் தெரிந்துவிடும்.