சில நாட்களுக்கு முன்பு மலையாளத்தில் இளம் நடிகர் உன்னி முகுந்தன் நடிப்பில் “மார்கோ” என்கிற திரைப்படம் வெளியாகியது. முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாகவும் அதிக அளவில் வன்முறை காட்சிகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
தற்போது இந்த படம் ஹிந்தியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதுடன், கொரியாவிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ஹனீப் அதேனி இயக்கியுள்ளார். இவர் முன்னதாக மம்முட்டி மற்றும் ஆர்யா இருவரையும் இணைத்து “தி கிரேட் பாதர்” என்கிற ஹிட் படத்தை வழங்கியவர். அதனைத் தொடர்ந்து நடிகர் நிவின் பாலியை வைத்து இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.
இந்த சூழலில் “மார்கோ” திரைப்படம் அவருக்கு மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. பொதுவாக ஒரு படம் வெற்றி பெற்றவுடன், அதன் இரண்டாம் பாகம் குறித்த பேச்சுக்கள் உடனே பரவத் துவங்கும். அதன்படி, “மார்கோ” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய விவாதங்கள் தற்போது பரவி வரும் நிலையில், அதில் வல்லமை மிக்க வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரம் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. விக்ரம் இப்படியான சவாலான கதாபாத்திரங்களை ஆர்வமாக ஏற்கும் நடிகர் என்பதால், இது உறுதியாக வாய்ப்புள்ளது என்று சிலர் நம்புகின்றனர்.